×

அஞ்சாவதுக்கு மேல படிக்க முடியல… அதான் பள்ளிக் கட்டடங்கள் கட்டுறேன்.. அரசுப் பள்ளிகளுக்கு அள்ளிக் கொடுக்கும் மாமனிதர்!

மதுரை தத்தனேரியில் 86 வயதைத் தொட்டிருக்கிற ராஜேந்திரன் தாத்தாவிற்கு, அப்பளம், மோர்மிளகாய், வத்தல், வடகம்தான் வியாபாரம்.மனைவி, 3 பெண்குழந்தைகளில், மனைவியும், ஒரு மகளும் இறந்துபோக, இரண்டு மகள்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். ‘‘இந்த இரண்டு மகள்கள் குடும்பம் மட்டுமில்லீங்க… என்னோட வத்தல் கம்பெனியில் வேலை பார்க்குற நாற்பது குடும்பங்களோடுதான் நானும் வாழறேன்…’’ என்று வேலை ஆட்களோடு உள்ள பந்தம் வெளிப்படும் விதமாக தன்னைப் பற்றி அறிமுகம் செய்துகொண்டார்.ராஜேந்திரன் தாத்தாவிடம் தொடர்ந்து பேசினோம்… ‘‘சொந்த ஊரு விருதுநகருங்க… ஐந்தாம் வகுப்புதான் படிச்சிருக்கேன். அதுக்கு மேல படிக்க வைக்க வீட்டுல வசதியில்ல. விருதுநகர்ல பூண்டுக் கடையில் வெறும் 25 ரூபா மாதச்சம்பளத்துக்கு வேலைக்குப்போனேன். கல்யாணமும் நடந்திடுச்சு. மனைவியும் வேலைக்குப் போயும் சம்பாத்தியம் பத்தல. உறவுக்காரங்க மதுரையில் இருந்ததால, சிறுகச் சிறுக சேர்த்த பணத்தோடு, அந்த மாசம் கிடைச்ச சம்பளம்னு மொத்தம் 300 ரூபாயோடு, 1951ல மதுரைக்கு வந்தேன். அந்த பணத்தை வச்சு இந்த மதுரையில அரிசி வியாபாரம் செஞ்சேன். பிறகு காய்கறி வியாபாரம், இதுல ஓரளவு வருமானம் கிடைச்சது. அதுக்கப்புறம் அப்பளம், வடகம், மோர் மிளகாய் வியாபாரம்னு இறங்கிட்டேன். சைக்கிள்ல ஊர் ஊரா போயி அப்பளம், வடகத்தை வித்துட்டு வந்தேன். வித்த பணத்தை வச்சு 1988ல ஒரு டூவீலர் வாங்கி வியாபாரத்தை தொடர்ந்தேன். சிறுகச் சிறுக உழைப்பில் சேர்த்த காசை வச்சு என்னோட பெண் குழந்தைகளை, நல்லா படிக்க வச்சு கல்யாணம் பண்ணி வச்சேன். இப்போ அவங்க நல்ல நிலையில் இருக்காங்க. குழந்தைகளை கரை சேர்த்த பிறகு, என்னோட சம்பாத்தியம் முழுக்க சேவைக்கு செலவாகணும்னு நினைச்சேன். படிப்பு ரொம்ப முக்கியம். அதான் படிக்க செலவுக்கு கஷ்டப்படற ஏழைகளை தேர்ந்தெடுத்து உதவி செய்ய ஆரம்பிச்சேன்‘‘ என்று தன் சேவையின் ஆரம்பத்தை பற்றி கூறினார்.

மதுரை மாநகராட்சி திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2018ல் 10 வகுப்பறைகள், பிரார்த்தனைக் கூடம், டூவீலர் நிறுத்துமிடம் என ரூ.1.10 கோடியில் இந்த ராஜேந்திரன் கட்டிக் கொடுத்திருக்கிறார். இதுதவிர மதுரை கைலாசபுரம் ஆரம்பப் பள்ளிக்கு ரூ.71.45 லட்சத்தில் 4 வகுப்பறைகள், ஆழ்துளைக் கிணறு, உணவுக்கூடம், கழிப்பறைகளும் கட்டித் தந்திருக்கிறார். கடந்த காலத்தில் கஜாபுயல் பாதித்தபோது மக்களில் பலருக்கும் தானே முன்வந்து ரூ.10 லட்சம் செலவில் டிபன்பாக்ஸ், தட்டுடன் உணவுப் பொருட்களும் என ஏராளமான உதவிகளைச் செய்திருக்கிறார். தனது எந்த உதவிகளையும் இவர் விளம்பரப்படுத்திக் கொள்ளாத நிலையில், இவரது சேவைகளால் பயனடைந்தோர் பட்டியல் நீண்டு கிடக்கிறது. இவரால் பயனடைந்தவர்களால் இவரைப்பற்றிய தவகலறிந்த மதுரை மாநகராட்சி கமிஷனர் பிரவீன் குமார் சமீபத்தில் ராஜேந்திரனை அழைத்து பாராட்டி மகிழ்ந்தார். ராஜேந்திரனின் கல்விச் சேவையை அறிந்த பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா, வத்தல், அப்பளக் கம்பெனிக்கே நேரில் வந்து ராஜேந்திரனை கட்டித்தழுவி, பொன்னாடை போர்த்தி, திருக்குறள் நூல் அளித்து பாராட்டி சென்றிருக்கிறார். தொடர்ந்து கல்விச்சேவையாற்றி வரும் ராஜேந்திரன், மாநகராட்சி திரு.வி.க. பள்ளியில் மேலும் சமையல் அறை கட்டுமானத்திற்க ரூ.7 லட்சம், மீனாட்சியம்மன் கோயில் புது மண்டபத்தில் அரசு அமைக்கும் அருங்காட்சியகத்திற்கு ரூ.2.5 கோடி, மதுரை செல்லூரில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம்… என கோடிக்கணக்கான ரூபாயில் பலதரப்பட்ட பணிகளையும் செய்து தருவதாக உறுதி தந்திருக்கிறார்.

இதுதவிர, இவரது வத்தல் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் 40 பேர்களையும் தன் குடும்ப உறுப்பினர்களை போல் பார்த்துக்கொண்டு மிகுந்த மனநிறைவுடன் ராஜேந்திரன் வைத்திருக்கிறார். ஒருமுறை அத்தனை பேரையும் ஐதராபாத்துக்கு விமானத்தில் சுற்றுலாவாக அழைத்துச் சென்று வந்திருக்கிறார் ராஜேந்திரன். தற்போது இந்த ஊழியர்களை குற்றாலம் அழைத்துச் செல்லவும் ஏற்பாடுகள் செய்து வருகிறார்.‘‘மதுரைக்கு வர்றப்போ பெருசா ஏதும் என்னிடமில்லை… மதுரைதான் என்னை வளர்த்து எடுத்துச்சு. குறிப்பாக இந்த தத்தனேரி, செல்லூர் பகுதிகள்ல உள்ள மக்கள்தான், என்னை வியாபாரத்துல முதலாளியாக்குனாங்க. சின்ன வயசுல என்னால படிக்க முடியல. அந்த வருத்தமெல்லாம்தான் இப்போ இந்த கல்விக்கூடங்களைக் கட்டித்தரணுங்கிற ஆவலைத் தந்திருக்கு. இன்னும் நம்ம சந்ததிங்களை நினைச்சு படிப்புக்காக ஏதாவது செய்யணும். செஞ்சுக்கிட்டே இருப்பேன். ஒரு பள்ளிக்கூடம் கட்டி நிறைய பிள்ளைகளை இலவசமாகப் படிக்க வைக்கணும்னு ஆசை இருந்துச்சு… அது பெரிய திட்டம். ஆனாலும் குறைஞ்சபட்சம் அரசுப் பள்ளிகளுக்கு கட்டிடங்களும், அடிப்படை வசதிகளும் செஞ்சு தரலாம்னுதான் இதுல இறங்கினேன். இறைக்கிற கிணத்துல தண்ணி ஊறுவது மாதிரி, இப்படி பல உதவிகள் செய்யச் செய்ய எனக்கு இறைவன் தொடர்ந்து வருவாயைத் தந்துகிட்டு இருக்காரு. உயிர் இருக்குற வரைக்கும் இயன்றளவிற்கு இன்னும் நிறையச் செய்யணும்’’ ஆத்மார்த்தமான சேவை இறுதிவரை தொடரும் என்பதைத் தீர்க்கமாக தெரிவித்தார் மக்களால் அன்பாக அழைக்கப்படும் ராஜேந்திரன் தாத்தா.
– செ. அபுதாகிர்,
படங்கள்: வீரணன்.

The post அஞ்சாவதுக்கு மேல படிக்க முடியல… அதான் பள்ளிக் கட்டடங்கள் கட்டுறேன்.. அரசுப் பள்ளிகளுக்கு அள்ளிக் கொடுக்கும் மாமனிதர்! appeared first on Dinakaran.

Tags : Rajendran Datta ,Madurai Dattaneri ,apple ,Dinakaran ,
× RELATED 3 ஆண்டுகளில் இந்தியாவில் 5 லட்சம்...